துறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா?



மோசமான மோசடியான இந்துமதக் கருத்துக்களுக்குத் திருத்தம்
இந்துமத மறுமலர்ச்சி வினாவிடைகள்

        இந்தத் தலைப்பின் கீழ் பலருக்கும் எழக்கூடிய ஐய வினாக்களுக்கு உரிய விடைகள் தொகுத்து வழங்கப் படுகின்றன. இந்த விடைகள் அனைத்தும் குருதேவர் பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்களால் அருளிச் செய்யப் பட்டவையே.

இந்த வினா விடைகள் அனைத்தும் 'குருதேவர்' என்ற மாத இதழில் அச்சிட்டு வெளியிடப் பட்டன.  பெரும்பாலான ஐயங்கள் இந்த வினா விடைகள் மூலமே தீர்ந்து விடும்.



துறவி நிலை இந்து சமயத்திற்கு உரிய ஒன்றா?
 
     துறவி நிலை இந்து சமயத்திற்குரிய ஒன்றல்ல. இந்து சமயத்தை இம்மண்ணுலகுக்கு வழங்கிய பதினெண் சித்தர்கள் யாரும் துறவியாக இருக்கவில்லை. அவர்கள் படைத்த கடவுள்கள் (48 வகையினர்) யாரும் துறவிகளாக இல்லை. இந்து மதத்துக்குரிய தலைவர்களை 'விந்து வழி வாரிசு', 'குருவழி வாரிசு' என்று பிரிக்கின்ற காரணத்தினால் திருமணம் செய்து கொண்டு வாழ்வது இன்றியமையாதது. இல்லறமே நல்லறம் என்று பதினெண் சித்தர்களால் வலியுறுத்தப்படுகின்றது. மேலும் துறவு நிலை என்பது நாட்டில் வாழும் மனிதர்களுக்கு உரிய ஒன்றல்ல.

' பெண்ணை, மண்ணை, பொன்னை வெறுப்பது மாபாவம்' என்று குருபாரம்பரியம் குறிக்கின்றது. பெண்ணை வெறுத்தலும், காவி கட்டுதலும் இந்து மதத்திற்கு உரிய ஒன்றல்ல, அப்படி வெறுத்து வாழ்பவர்கள் மதத் தலைவர்களாக இருப்பதற்கோ, அருள்வழங்குவதற்கோ தகுதியற்றவர்கள். காட்டில் வாழும் கொடிய விலங்குகளோடு வாழவே தகுதியானவர்கள்.

தமிழில் துறவி மட்டுமின்றி 'அறவி', 'ஆறவி', 'இறவி', 'உறவி', 'மறவி', ... என்று பல்வேறு நிலைகளும் குறிக்கப் படுகின்றன.
 



மனைவி மக்களைத் துறந்துதான் மாபெரும் சித்திகளைப் பெற முடியுமா? ஆண்/பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையா?


     பதினெண் சித்தர்கள், மனித இனம் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் இளமுறியாக் கண்டத்தில் (The Lost Lemuria continent- குமரிக் கண்டம்) தங்களது தாய்மொழியான தமிழ்மொழியில் தங்களது மதமான இந்து மதத்தை வழங்கியே மனிதப் பண்புகளையும், நாகரிகங்களையும் வளர்த்தார்கள். அவர்களுடைய விந்துவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளும் தொடர்ந்து வாழ்ந்தும் கூடத் தமிழர்களே அவர்களின் தலைமையையும், துணையையும், வழிகாட்டலையும்... ஏற்றுப் போற்றவில்லை. அதனால்தான், இந்துமத வரலாறு, தத்துவம், இலக்கியம், கலை, ஒழுகலாறு, விதி, சட்டம், மரபு, சம்பிறதாயம், சாத்திறம், தோத்திறம் ... முதலிய அனைத்தும் குழப்பமடைந்தன.

   பதினெண் சித்தர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாகப் படைத்துள்ள 'கடவுள்கள்' (48 வகையினர்) அனைவருமே மனைவியோடு பெண்ணின்பம் துய்த்து வாழும் இல்லறத்தார்களே. பிறகு எப்படி ஆண்பெண் இன்பத்துக்குப் பத்தி மார்க்கம் தடையாகும்?

      மனைவி மக்களைத் துறக்கும் "துறவி" பற்றிய கருத்து ஆரியருடையதே. இது தவறு, பயனற்றது, 'துறவியாக இருப்பவன் குரு, ஆச்சாரி, பீடம், மடம், சன்னிதானம், ஆதினம், அமளிகை, திருவடி, இருக்கை, நாயகம் ... என்ற 48 அருட்பட்டப் பொறுப்புக்களில் எதையுமே ஏற்கும் தகுதியுடையவனல்ல. துறவி ஒரு பாவியே' என்ற குருபாரம்பரிய வாசகமே இங்கு பதிலாகத் தரப்படுகிறது.



இந்துமதத் தலைவர்கள் பெரும்பாலும் துறவிகளாகவே இருக்கிறார்கள். பதினெண் சித்தர்கள்தான் இந்துமதத்தைப் படைத்தவர்கள் என்பதால் அவர்களின் விளக்கமென்ன இதற்கு?

   இந்த
வினா தெளிவாக இல்லை. துறவி இந்துமதத்தில் எந்தவித முதன்மையும் பெறவே முடியாது. இல்லறத்தார்தான் பூசைகளை, தவங்களை, வேள்விகளை, யாகங்களை, யக்ஞங்களை, ஓமங்களை, ... முன்னின்று செய்ய வேண்டும் என்ற சட்டமே 'பூசாவிதி', 'குருமார் ஒழுகலாறு', 'கருவறைப்படி' எனும் நூல்களில் உள்ளது.

குறிப்பு:
பதினெண்சித்தர்கள் அருளுலக வாழ்வில் ஈடுபடுபவர்களின் நிலைகளை 16 வகையாகக் குறிக்கிறார்கள்.

1. அறவி,
2. ஆறவி,
3. இறவி,
4. உறவி,
5. கறவி,
6. துறவி,
7. திறவி,
8. பறவி,
9. பிறவி,
10. புறவி,
11. பைறவி,
12. நறவி,
13. மறவி,
14. மைறவி,
15. வறவி,
16. வேறவி.

     இவர்களில் துறவி என்பவர்கள் கூட இல்லற வாழ்வு வாழ்ந்து, பல்வேறு காரணங்களைக் குருவிடம் விளக்கி, குருவழிப் பூசையால் குருவின் ஒப்புதல் பெற்று துறவு மேற்கொள்ள வேண்டும். அதுவும், தன்னை நம்பியிருக்கும் பெற்றோர், வாழ்க்கைத் துணை, உடன் பிறந்தார், மக்கள், கடன் கொடுத்தார் முதலியோருக்கு உரிய வாழ்வியல் வழிவகைகளைச் செய்த பிறகே குருவாணைப்படி துறவு வாழ்வு வாழவேண்டும்' என்ற குருபாரம்பரிய வாசகம் தெளிவான, முழுமையான, முடிவான பதிலாக இங்கே வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment